Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)
சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, அமைக்கப்பட்ட சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) வாயிலாக ‘சென்னை ஒன்’ என்ற செயலி உருவாக்கப்பட்டது.
கடந்த செப்.22-ம் தேதி முதல் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலி வாயிலாக மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகரப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட்களை க்யூஆர் குறியீடு வழியாகப் பெறலாம்.
இந்த 3 சேவைகளுக்கும் சேர்த்து அல்லது தனித் தனியாகவும் மக்கள் இந்த செயலியில் டிக்கெட் பெற முடியும். இந்த செயலியை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநகரப் பேருந்துகளில் ரூ.1,000, ரூ.2,000-க்கான மாதாந்திர பேருந்து அட்டைகளும் இதில் விநியோகிக்கப்படுகிறது.
அதன்படி, செயலி மூலம் புகைப்படம் மற்றும் தொகையை பதிவேற்றி மாதம்தோறும் பயண அட்டைகளைப் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் ஏறியதும் ‘சென்னை ஒன்’ செயலியில் உள்ள மாதாந்திர பயண அட்டையில், பயணிக்கும் பேருந்தின் எண்ணைப் பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு முறை பயணத்தின் போதும், பேருந்தின் எண்ணைப் பதிவிடுவது சிரமமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இனி அந்த செயலியில் உள்ள மாதாந்திர பேருந்து அட்டையை நடத்துநரிடம் காண்பித்தால் போதும் என்று கும்டா தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / vidya.b