விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு!
சென்னை, 17 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், கடந்த ஜனவரி 13 ஆம் தேதி விசைப்படகில் சென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் ஒன்ற
Rameshwaram Fishermen


சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், கடந்த ஜனவரி 13 ஆம் தேதி விசைப்படகில் சென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் ஒன்று, தமிழக மீனவர்களின் விசைப்படகை சுத்தி வளைத்தது.

இதையடுத்து, தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்கள் 3 பேரையும் கைது செய்த இலங்கை கடலோர காவல்படை, அவர்களிடம் இருந்த விசைப்படகு, மீன்பிடி வலைகள், பிடித்து வைக்கப்பட்டிருந்த மீன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரையும், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த தகவலை கேட்டு மீனவர்களின் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு உடனடியாக தலையிட்டு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 மீனவர்களையும் விடுவிக்க கோரி குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவசர கடிதம் எழுதினார்.

இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதற்கு பலனாக, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 3 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

மேலும், விடுவிக்கப்பட்ட 3 மீனவர்களையும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீனவர்களை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.

தொடர்ந்து, மீனவர்களுக்கு பாஸ்போர்ட் இல்லாததால், இந்திய தூதரக அதிகாரிகள் அவசர பயண சான்றிதழை மூவருக்கும் தயார் செய்து, கொழும்புவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை அனுப்பி வைத்தனர்.

சென்னை வந்தடைந்த 3 மீனவர்களையும் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் அவர்களின் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN