Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 மார்ச் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்றார்.
அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை மாநில காவல்துறையிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.அதோடு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு, சி.பி.ஐ. விசாரணையை கண்காணித்து வருகிறது.
கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது மீட்புப் பணிக்காக மருத்துவமனைக்குச் சென்றது குறித்தும், இந்த விபத்து குறித்த விவரங்களைக் கேட்டறியவும் முன்னாள் அமைச்சரும், கரூர் தி.மு.க. மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி சி.பி.ஐ. விசாரணைக்கு நேற்று (16.03.2026) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற செந்தில் பாலாஜியுடன் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தியும் உடன் சென்றிருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, செந்தில் பாலாஜி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் இன்று (17.03.2026) நேரில் ஆஜராகியுள்ளார்.
சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணி அளவில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம், இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் அங்கு நிலவிய சூழல் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே விஜய் மூன்று முறை டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b