Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 17 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், குறிப்பாக பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் கூறுகையில்,
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தமிழிசை வேதனை தெரிவித்தார். குறிப்பாக, விளாத்திகுளம் பகுதியில் நடந்த குற்றச் சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதையும், காவல்துறையினர் இது குறித்து கிண்டலாகப் பேசுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
புள்ளிவிவரங்களை முன்வைத்த அவர், தமிழகத்தில் போக்ஸோ (POCSO) வழக்குகள் 59 சதவீதமும், பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்கள் 129 சதவீதமும் அதிகரித்துள்ளன. ஆனால், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பது வெறும் 10 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது இந்த அரசின் தோல்வியைக் காட்டுகிறது என்றார்.
நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்ட தமிழிசை, 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டில் விடப்பட்ட நிலையில், அவர் 16 கிலோமீட்டர் நடந்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் பெண்களுக்குப் பாதுகாப்புத் தராத ஸ்டாலின் அரசு வீட்டிற்குப் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆவேசமாகப் பேசினார்.
திமுக ஆட்சியில் தமிழகம் 'கொலை மாநிலமாக' மாறிவிட்டதாக அவர் விமர்சித்தார். ஸ்டாலின் பதவியேற்ற பிறகு சுமார் 8,690 கொலைகள் நடந்துள்ளன. 22 லட்சம் டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை எலி தின்றுவிட்டதாகக் கூறுவது நகைப்புக்குரியது. தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருக்குக் கூடத் தமிழ் பெயர் வைக்கவில்லை என்று விமர்சித்த தமிழிசை, பிரதமர் மோடி தூத்துக்குடி விமான நிலையத்திற்குத் தமிழ் பெயரைச் சூட்டி கௌரவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தமிழுக்கு உண்மையான அங்கீகாரம் அளிப்பது பாஜக தான் என்பதை அவர் வலியுறுத்தினார்.
எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழலால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதை ஒப்பிட்டார். இந்திய மக்களைப் பாதிக்காத வகையில் மத்திய அரசு மேலாண்மை செய்து வருவதாகவும், வணிக ரீதியிலான சிலிண்டர் கட்டுப்பாடுகள் வீட்டு உபயோக நுகர்வோரைப் பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்துக் கேட்கப்பட்ட போது, கட்சித் தலைமை மற்றும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனது முடிவு அமையும் என்று தெரிவித்தார்.
மேலும், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்றும், அது மக்களுக்கான சிறந்த திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN