Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 17 மார்ச் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர்களுக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை திருமஞ்சனம் என்று கூறுவது வழக்கம்.
அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருடத்தில் நான்கு முறை திருமஞ்சனம்
(கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும்
நிகழ்ச்சி)நடத்தப்படுகிறது.
யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனி வார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய
திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில்
நான்கு முறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திருமஞ்சனம் நடத்துவார்கள்.
இந்த நிகழ்ச்சியின் போது ஏழுமலையான் கோவிலையும் ஒரு ஆழ்வாராக கருதி அதனை
முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் காரணத்தால்
இந்த நிகழ்ச்சி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இம்மாதம் 19 ம் தேதி யுகாதி ஆகையால் அதற்கு முந்தைய செவ்வாய்க் கிழமையான இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
அப்போது தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து பல்வேறு வகையான திரவியங்களை
பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட நறுமண கலவையை கோவில் சுவர்களுக்கு தெளித்தனர்.
தொடர்ந்து பகல் 11 மணி முதல் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்பட உள்ளனர்.
கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் காரணமாக இன்று அதிகாலை முதல் பகல் 11 மணி வரை
சுமார் 6 மணி நேரம் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
Hindusthan Samachar / GOKILA arumugam