கடலூரில் திமுக அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் போராட்டம் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
கடலூர், 17 மார்ச் (ஹி.ச) தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் புழக்கம், ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இணைந்து வரு
கடலூரில்  திமுக அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள்  போராட்டம் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு


கடலூர், 17 மார்ச் (ஹி.ச)

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் புழக்கம், ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இணைந்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு திமுக அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,

தமிழ்நாடு முழுவதும் திமுக அரசை விரட்டி அடிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. திமுக ஆட்சி செய்து தமிழ்நாட்டை நாசப்படுத்தியது போதும். பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் மக்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். தமிழ்நாட்டை மன்னர்கள் ஆங்கிலேயர்கள் முதல்வர்கள் பலர் ஆண்டு உள்ளனர். ஆனால் தற்போதைய முதலமைச்சர் ஆண்டு வரும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக உள்ளது. பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பத்திரமாக திரும்ப வருவார்களா என பெண்கள் வயிற்றில் நெருப்பு கட்டி வைத்துக்கொண்டு தினம் தோறும் எதிர்நோக்கி வருகின்றனர். தகுதி இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது தேர்தலுக்காகவோ ஓட்டுக்காகவோ இதனை சொல்லவில்லை. முதலமைச்சர் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை இவருக்கு எதற்கு முதலமைச்சர் பதவி இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்று மகள்களை பெற்ற தந்தையாக சொல்கின்றேன் உணர்வுபூர்வமாக கூறுகின்றேன் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத முதலமைச்சராக உள்ளார்.

ஒரு நாளைக்கு ஐந்து கொலைகள் என ஐந்து ஆண்டுகளில் 7,832 கொலைகள் நடந்துள்ளது. இதில் 1973 பெண்கள் கொலை செய்துள்ளனர் 361 குழந்தைகள் கொலை செய்துள்ளனர். இதில் 38 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த கொடூரத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர்களாக இந்த ஆட்சியாளர் உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 44 ஆயிரம் குற்றங்கள் நடைபெற்று உள்ளது.

இதில் 2021 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். 62,000 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராகவும் இதில் 27000 குற்றங்கள் போஸ்கோ வழக்கு உள்ளது. இதனை எல்லாம் பார்க்கும் வெட்கக்கேடான ஆட்சி இது.

இதற்கு முதல் காரணம் முதலமைச்சர். அடுத்தது கள்ள சாராயம் டாஸ்மாக் காரணமாகும். மேலும் 4,700 டாஸ்மாக் கடைகளும் 1500 மனமகிழ் மன்றம் தமிழகத்தில் இருந்து வருகின்றது. ஆனால் இவர்கள் 500 டாஸ்மாக் கடைகளை மூடினோம் என தெரிவித்துள்ள நிலையில் மனமகிழ் மன்றம் அதிகளவில் திறந்து உள்ளது. மேலும் 25 ஆயிரம் சந்து கடை உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சாராயம் கிடைத்து வருகின்றது. இந்த சாராய விற்பனை செய்யும் பண முழுவதும் முதலமைச்சர் குடும்பத்திற்கு செல்கின்றது.

தமிழகத்தில் 22 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் குடி, கஞ்சா ஆகியவற்றை பயன்படுத்தியது உடன் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ன தெரியாமல் அனைத்து குற்றங்களும் நடைபெற்று வருகின்றது. இதனை உருவாக்கியது முதலமைச்சராகும். கையாலாகாத ஆட்சியாக உள்ளது.

ஆனால் தினம் தோறும் விளம்பரம் படத்தில் நடித்து வருகிறார் முதலமைச்சர். தமிழ்நாடு ஒளிர்கிறது மிளிர்கிறது என கூறுகிறார் ஆனால் எங்கு ஒளிர்கிறது என தெரியவில்லை.

எங்கே பார்த்தாலும் கொள்ளையடித்து இருக்கிறார்கள். தமிழ்நாடு நாசப்படுத்தி உள்ளனர். முதலமைச்சர் என்ற பெயரில் நான்கு வியாபாரிகள் உள்ளனர். கலெக்ஷன் கரெக்ஷன் கமிஷன் இதுதான் இந்த ஆட்சியின் நிலையாகும். இது தவிர வேற எதுவும் தெரியாது. தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என கனவு காண்கிறார்கள். கடலூர் மாவட்டம் என் மண்.

இங்குள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதியில் திமுக டெபாசிட் இழந்து தோற்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அவர்களும் இதனை பார்க்க தான் போகிறார்கள். மோசமான மோசடியான ஆட்சியாக உள்ளது. இதனை அனுபவித்து வருகின்றோம். கடந்த முறை நீங்கள் திமுக வாய்ப்பு கொடுத்ததால் எல்லா துறைகளும் தோல்வி. சட்ட ஒழுங்கு மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். என்பது வயது மூதாட்டியை பாலியல் வன்கொடைமை செய்துள்ளனர். 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உள்ளனர். கிருஷ்ணகிரியில் திமுக நிர்வாகி சிறிய பெண் குழந்தையை கொலை செய்துள்ளார். இதனை தமிழக மக்கள், பெற்றோர்கள் கண்டிப்பாக முதலமைச்சரை மன்னிக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு அது தொடர்பாக புகார் அளிக்க போலீஸில் நிலையத்திற்கு சென்றால் வழக்கு பதிவு செய்யவில்லை. அதன் பிறகு மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில் ஆயிரக்கணக்கான திரண்ட பிறகு வழக்கு பதிவு செய்து போலீசார் வடமாநில நபரை ஒருவரை பிடித்து கைது செய்தனர். அப்பொழுது வட மாநில நபர் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால் தமிழக பகுதியில் கஞ்சா, சாராயம், போதை மாத்திரைகள் கிடைக்கின்றது என கூறியுள்ளார். எவ்வளவு கேவலமான அரசாக இந்த அரசு செயல்பட்டு உள்ளது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.

வீரமங்கை அஞ்சலை அம்மாள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஆகையால் இனி தயவு செய்து திமுக ஆட்சியை விடக்கூடாது. தாய்மார்கள் காலை பிடித்து கேட்கிறேன் . முதலமைச்சராக ஸ்டாலின் மீண்டும் வர மாட்டார் இருந்தபோதிலும் மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் வந்தால் கஞ்சாவை விட அதிக போதை தரும் போதை பவுடர் விற்பனை அதிகரிக்கும். மேலும் நகரப் பகுதியில் மட்டும் இல்லை குக் கிராமம் வரை தற்போது இதுபோன்ற போதை பவுடர் கிடைக்கும். கல்வி நிறுவனங்களின் வெளிப்புறத்தில் போதை பவுடர் கிடைத்து வருகின்றது. ஆகையால் கையாளாத ஆட்சியை விரட்டி அடித்து, மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை அமர வைக்க வேண்டும். இதன் மூலம் புதிய தமிழகத்தை அமைப்போம்.

இந்த நிலையில் கடந்த ஐந்தாண்டுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். விவசாயிகள் நமக்கு சோறு போடும் தெய்வமாக கருதுகிறோம் ஆனால் இந்த ஆட்சியை நடத்துபவர்கள் கொள்ளையடிப்பதற்காக இந்த ஆட்சி நடத்தி வருகின்றனர். சட்ட ஒழுங்கு சரியில்லாத ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்று தற்போது வரை 6 லட்சம் கோடி கொள்ளை அடித்து வைத்துள்ளனர். இதனை ஆதாரப்பூர்வமாக கூறுகின்றேன்.

கடந்த 74 ஆண்டுகளில் தமிழகத்தில் 4.56 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர். ஆனால் இந்த திமுக ஆட்சி பதவியேற்று ஐந்தாண்டுகளில் 4.96 லட்சம் கோடி கடன் பெற்று உள்ளனர். இந்த கடனை பெற்று தமிழகத்திற்கு ஏதேனும் திட்டங்கள் செய்தார்களா, ஆனால் உத்திர பிரதேச மாநிலத்தில் 24 கோடி மக்கள் உள்ள நிலையில் அங்கு நாம் வாங்கிய கடனை விட மிக குறைச்சலான கடன் தான் பெற்று உள்ளனர். ஆகையால் இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்.

மேலும் திமுக 505 தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் 66 தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக செயல்படுத்தி உள்ளனர். இதன் மூலம் 13 விழுக்காடு மட்டுமே தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி உள்ளனர்.

ஆகையால் இந்த ஆட்சி ஃபெயிலான ஆட்சி. தகுதி இல்லாத ஆட்சி. ஆகையால் எங்கள் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். நாங்கள் பதவி ஏற்றவுடன் விவசாயிகள் அரசு அலுவலர்கள் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான திட்டங்களை வழங்குவோம். மிக முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்போம். தரமான கல்வி வழங்குவோம்.

சாத்துப்பட்டு பகுதியில் இருந்து தொடக்க பள்ளி இரண்டு மாணவர்களை முதலமைச்சர் அழைத்து டாக்டர் ஆக வேண்டும் என தெரிவித்தார். அப்பொழுது நான் அவர்கள் பள்ளிக்கு முதலில் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என தெரிவித்தேன். மேலும் ஒரு லட்சம் வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லை. ஆகையால் மக்கள் சிந்தித்து மாற்றம் உருவாக்க வேண்டும். ஏனென்றால் பெண்களை நாம் கடவுளாகவும் குலசாமியாகவும் பாவித்து வருகின்றோம். மேலும் தமிழகத்தில் தான் அதிக பெண் தெய்வங்கள் உள்ளனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை தூக்கி எறியுங்கள். கோபம் கொந்தளிப்பு அதிக அளவில் இருக்க வேண்டும். எங்கள் கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் அதன் மூலம் தமிழகத்தை மீட்டெடுப்போம். புதிதாக உருவாக்கும் நல்லாட்சி கொடுப்போம்.

கோபத்துடன் இங்கிருந்து செல்கின்றேன். எனது கோபம் அடங்க வேண்டும் என்றால் மே 4 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்ந்தெடுத்து உள்ளார் என்பது தெரிந்த பிறகுதான் கோபம் தனியும்.

ஆகையால் நிர்வாகிகள் மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் நிச்சயமான மாற்றத்தை கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b