தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சென்னை, 18 மார்ச் (ஹி.ச) தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்று மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தை வ
24-Hour Election Control Room


சென்னை, 18 மார்ச் (ஹி.ச)

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்று மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் கீழ் இயங்கும் தேர்தல் ஊடக கண்காணிப்பு மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை, மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஊடகக் கண்காணிப்பு மையத்தில் உள்ள தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்படும் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா என்பது பதிவு செய்யப்படும்.

அதேபோல், சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கள மிறக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகளுக்காக பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் பணியில் ஈடுபட்டு, தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வதை மாவட்ட கட்டுப்பாட்டு அறை வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

இதையொட்டி, பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 18004257012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் ‘சிவிஜில்’ செயலி மூலம் வரப்பெறும் புகார்களும் இந்த மையத்தின் வாயிலாகத் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b