திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு - ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை, 18 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்று மே 4-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த தேர்
5 Seats Allocated to the Communist Party


சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்று மே 4-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, நாதக, தவெக என அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆளும் திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

திமுக கூட்டணியில் மொத்தம் 21 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில், இ.யூ.மு.லீக், மமக., காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, தவாக, மக்கள் விடுதலை கட்சி, ம.நீ.ம., கொ.ம.தே.க., எஸ்.டி.பி.ஐ., ம.ஜ.க., முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

இதுவரை நடத்த பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகளும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, ஒரு இடங்கள் குறைத்து 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் மு. வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்த உடன்பாடு இன்று கையெழுத்தானது.

தொகுதிப் பங்கீடு ஒப்பந்த உடன்பாடில் கூறியிருப்பதாவது,

நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளர் மு. வீரபாண்டியன் அவர்களும் இன்று (18-3-2026), தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 5 (ஐந்து) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி தனது கை சின்னத்திலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏணிச் சின்னத்திலும், மனித நேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்திலும், ம.தி.மு.க. மூன்று தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b