Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)
5 ஆண்டுகளில் 5 உதவிப் பேராசிரியர்களை மட்டுமே
நியமனம் செய்துள்ளது தான் திமுகவின் சாதனை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை நியமிக்கும் அறிவிப்பை கொண்டாட்டமாக வெளியிட்ட திமுக அரசு, வெறும் 5 பேரை மட்டும் அப்பணிக்கு நியமித்து விட்டு மூடுவிழா நடத்தியிருக்கிறது. ஐந்தாண்டு ஆட்சியில் வெறும் 5 உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமித்து அரசு கலை & அறிவியல் கல்லூரிகளை திமுக அரசு சீரழித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை கடந்த அக்டோபர் 16&ஆம் தேதி வெளியிட்டு, திசம்பர் 27-ஆம் தேதி போட்டித் தேர்வுகளை நடத்திய ஆசிரியர் தேர்வு வாரியம் நினைத்திருந்தால், அனைத்து நடைமுறைகளையும் ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்து 2708 உதவிப் பேராசிரியர்களையும் நியமனம் செய்திருக்க முடியும். ஆனால், மார்ச் 13&ஆம் தேதி வரை வெறும் 5 உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமனம் செய்திருக்கிறது. மார்ச் 15&ஆம் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டதால், மீதமுள்ள 2703 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், உதவிப் பேராசிரியர்களின் நியமனத்திற்கு ஓசையின்றி மூடுவிழா நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் திமுக அரசு படுதோல்வியடைந்துள்ளது.
மொத்தம் 61 பாடங்களுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளில் 42,064 பேர் பங்கேற்றனர். திசம்பர் 27&ஆம் நாள் போட்டித்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அதே நாளில் விடைக்குறிப்புகளை வெளியிட்டு, அடுத்த ஒரு வாரத்தில் அதன் மீதான ஆட்சேபனைகளைப் பெற்று, ஜனவரி 5&ஆம் நாள் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளைத் தொடங்கியிருந்தால் 20&ஆம் தேதிக்குள் முடித்திருக்க முடியும். அடுத்த 10 நாள்களில் சான்றிதழ் சரிபார்ப்புகளை முடித்து தேர்வு செய்யப்பட்டோருக்கு நியமன ஆணைகளை வழங்கியிருக்க முடியும். சமூகநீதியில் அக்கறையுள்ள அரசு அதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், திமுக அரசு அதை செய்யவில்லை. போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, இன்றுடன் 82 நாள்கள் ஆகும் நிலையில், மொத்தமுள்ள 61 பாடங்களில் 5 பாடங்களுக்கான விடைத்தாள்கள் மட்டும் தான் திருத்தப் பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு 13 உதவிப் பேராசிரியர்களை மட்டும் தான் நியமிக்க முடியும். அதிலும் கூட திமுக அரசு செய்த குளறுபடிகளால் 4 பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 11 உதவிப் பேராசிரியர்களில் 6 பேருக்கு தகுதி இல்லை என்று கூறி வெறும் 5 பேருக்கு மட்டுமே நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
உண்மையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் எண்ணம் திமுக அரசுக்கு கொஞ்சமும் இல்லை. இந்த விவகாரத்தில் திமுக அரசின் தோல்வியையும், அலட்சியத்தையும் பா.ம.க. தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்ததன் பயனாகவே 2708 உதவிப் பேராசிரியர்களை நியமிக்கும் அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டது.
அப்போதும் கூட அந்த நியமனங்களை செய்ய திமுக அரசுக்கு மனம் இல்லை. அதைச் சுட்டிக்காட்டி கடந்த பிப்ரவரி 17&ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து தான் விடைத்தாள்களைத் திருத்தும் பணி தொடங்கப்பட்டது. பெயரளவில் 5 பேரை மட்டும் நியமித்து விட்டு திமுக ஒதுங்கிவிட்டது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த 2021&ஆம் ஆண்டில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. ஆனால், 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. ஆனால், அதன் பிறகு இரு ஆண்டுகள் ஆகியும் அதற்கான அறிவிப்பைக்கூட திமுக அரசு வெளியிடவில்லை.
அதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டிய பிறகு 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை வெளியிட்ட திமுக அரசு, அதையும் பல முறை ஒத்திவைத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், 4,000 பேருக்கு பதிலாக 2708 பேரை தேர்ந்தெடுக்க அறிவிக்கை வெளியிடப்பட்டது. இப்போது அந்த அறிவிப்பும் சுருங்கி வெறும் 5 உதவிப் பேராசிரியர்கள் என்ற அளவுக்கு குறைந்து விட்டது.
திமுக ஆட்சியில் 35 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும், 252 புதியப் பாடப்பிரிவுகளைத் தொடங்கியதாகவும் திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதன் மூலம் 28,346 மாணவர் சேர்க்கை இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டன. ஏற்கனவே இருந்த 173 பாடப்பிரிவுகளில் 2008 கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த இடங்களில் கூடுதலாக சேர்க்கப்படும் 30,354 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக மட்டும் 1000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இன்னொரு புறம் ஏற்கனவே காலியாக இருந்த 7000 ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இவை அனைத்தையும் நிரப்ப வேண்டும் என்றால், குறைந்தது 10 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 5 பேரை மட்டும் தான் திமுக அரசு நியமித்துள்ளது. தமிழ்நாட்டின் மாணவர்கள் மீதும், அரசு கல்லூரிகள் மீதும் திமுக அரசுக்கு உள்ள அக்கறை அவ்வளவு தான்.
அரசு கலைக் கல்லூரிகளில் போதிய எண்ணிக்கையில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் இல்லாததால் மாணவர் சேர்க்கைக் குறைந்துள்ளது.
நடப்பாண்டில் மொத்தமுள்ள 1.26 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்களில் 96 ஆயிரம், அதாவது 76.2% இடங்கள் மட்டும் தான் நிரம்பியுள்ளன. திமுக ஆட்சியின் முந்தைய 4 கல்வி ஆண்டுகளிலும் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்தே வந்திருக்கிறது. இப்படியாக அரசு உயர்கல்வி நிறுவனங்களை சீரழித்து புதைகுழியில் தள்ளியது தான் திமுக அரசின் சாதனையாகும்.
திமுக அரசு செய்த துரோகத்தால் 2703 பேருக்கு உதவிப் பேராசிரியர் பணி கிடைக்கவில்லை. ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிட்டு, அவர்களுக்கு ஆசை காட்டி, போட்டித் தேர்வுகளை நடத்தி, கடைசியில் பணி நியமனம் செய்யாமல் துரோகம் செய்த திமுக அரசை உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மன்னிக்க மாட்டார்கள். இதற்காக வரும் தேர்தலில் அவர்கள் திமுகவுக்கு தண்டனை வழங்குவார்கள்.
தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பதவியேற்றதும், தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு தகுதியுடையை தேர்வர்கள் அனைவருக்கும் உதவிப் பேராசிரியர் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ