Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)
2004–2010 கால ஆண்டில் காங்கிரஸ் கால கடன் சுமை எண்ணெய் நிறுவனங்களுக்கு முழு தொகையாக செலுத்தப்பட்டது என மத்திய அரசு அறிவித்துள்ளதாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எக்ஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 2004ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரை மத்திய காங்கிரஸ் அரசு இருந்த போது கடன் பத்திரங்களை அளித்து எண்ணெய் நிறுவனங்களிடம் பெற்ற அசல் மற்றும் வட்டி உள்ளிட்ட கடன் தொகையான ரூபாய்.2.92 லட்சம் கோடி ரூபாயை இந்த மாதத்தோடு முழுமையாக செலுத்தி விட்டது மத்திய பாஜக அரசு.
முறையான நிதி நிர்வாகமின்மையால், கொள்கை முடக்குவாதத்தால் கடன் சுமையை அதிகரித்த காங்கிரஸ் அரசின் தவறான செயல்பாடுகளால் அதிகரித்த கடனை கடந்த 12 வருடங்களில் பாஜக அரசு அடைந்துள்ளது. இந்த பணத்தை மட்டும் துறைமுகம், சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்திருந்தால் இந்நேரம் இந்தியா உலகின் முதன்மை நாடாக இருந்திருக்கும்.
வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட இந்த செலவினங்களை (Off Budget) நிதி நிலை அறிக்கையில் வெளிப்படுத்தாது இருந்ததன் மூலம், அன்றைய காங்கிரஸ் அரசு நிதிப்பற்றாக்குறையை குறைத்து காட்டியது என்பதே உண்மை. ஆனாலும், திருப்பி செலுத்தும் பணத்தை நிதி நிலை அறிக்கையின் மூலமே செலுத்த வேண்டி வரும் என்று தெரிந்தும் தன் கடன் சுமையை அதிகரித்து கொண்டது அன்றைய காங்கிரஸ் அரசு. தங்களின் தவறை/ நிர்வாகமின்மையை மூடி மறைக்க பெட்ரோல்/ டீசல் விலை குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்தன எதிர்க்கட்சிகள்.
பாஜக அரசின் திறமையான நிதி நிர்வாகத்தினால் நஷ்டத்தில் மூழ்கியிருந்த எண்ணெய் நிறுவனங்கள் இன்று தங்களின் கடனை திரும்ப பெற்றதோடு லாபத்தில் இயங்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ