சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க வந்த தம்பதியினரிடமிருந்து ரூபாய் 65 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர்
சென்னை, 18 மார்ச் (ஹி.ச.) சிந்தாதிரிப்பேட்டை கேசினோ தியேட்டர் அருகே சற்று முன்பாக தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த வாகனத்தை சோதனை செய்த போது ஆவணங்கள் இன்றி ரூபாய் 65 ஆயிரம் பணம் ஒரு பண்டலாகவும்,
Hs


சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)

சிந்தாதிரிப்பேட்டை கேசினோ தியேட்டர் அருகே சற்று முன்பாக தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வந்த வாகனத்தை சோதனை செய்த போது ஆவணங்கள் இன்றி ரூபாய் 65 ஆயிரம் பணம் ஒரு பண்டலாகவும், ரூபாய் 5,000 தனியாகவும் வைத்திருந்துள்ளனர்.

இதனையடுத்து ரூபாய் 70 ஆயிரத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அதற்குண்டான ஆவணங்களை கேட்டுள்ளனர்.

ஆவணங்கள் தங்களிடம் இல்லை என தெரிவித்தனர். போலீசார் விசாரணையில், நெய்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பதும் இவரது மனைவி மின்சார துறையில் பணிபுரிந்து வருவதாகவும் தற்போது தனது மனைவிக்கு சென்னையில் பணி மாறுதல் கிடைத்ததால் இங்கு வாடகைக்கு வீடு எடுத்துள்ளதாகவும் அதற்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஒரு பண்டலாக இருந்த ரூபாய் 65 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர் தனியாக இருந்த ரூபாய் 5,000 பணத்தை அவர்களிடமே ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், கணேசன் என்பவரின் மனைவி தாங்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு இந்த பணத்தை கொண்டு வரவில்லை எனவும் வீட்டு வாடகைக்கான அட்வான்ஸ் தொகை இது எனவும் மேலும் இன்று, தான் பணியில் சேர வேண்டும் அதற்கான ஆர்டர் உள்ளது என அதிகாரிகளிடம் ஆர்டரை கண்ணீர் மல்க காண்பித்தார்.

நிலை கண்காணிப்புக் குழுவினர், தேர்தல் நேரம் என்பதால் ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 50,000 மற்றும் அதற்கு மேல் பணத்தை கொண்டுவரக் கூடாது எனவும் இது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அதனால் ஒத்துழையுங்கள் என கூறி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

கண்ணீருடன் அத்தம்பதியினர் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் சென்றுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ