தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
தூத்துக்குடி, 18 மார்ச் (ஹி.ச.) தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர
Election Awareness Event


தூத்துக்குடி, 18 மார்ச் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,

வளர்ந்த நாடுகளான அமெரிக்காவிலேயே பெண்கள் வாக்குரிமை பெற நீண்ட போராட்டங்களைச் சந்தித்தனர்.

ஆனால், இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையால், இந்தியா சுதந்திரம் அடைந்த போதே பெண்களுக்குச் சமமான வாக்குரிமை வழங்கப்பட்டது.

அண்டை நாடுகளான இலங்கை, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகியவற்றில் வன்முறை அல்லது மக்கள் புரட்சி மூலம் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் ஒருமுறை கூட சட்டத்திற்குப் புறம்பான முறையிலோ அல்லது ராணுவப் புரட்சி மூலமோ ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில்லை. இது இந்திய ஜனநாயகத்தின் பெரும் சாதனையாகும்.

இந்திய ஜனநாயகம் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு மிகத் தெளிவான அரசியலமைப்புச் சட்டம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம் ஆகியவையே காரணம்.

யார் நம்மை ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களிடம் வருகிறது. எந்தவிதத் தூண்டுதலுக்கோ அல்லது ஆசை வார்த்தைகளுக்கோ இடமளிக்காமல், உங்கள் மனசாட்சிப்படி தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜனநாயக ரீதியில் நீங்கள் செய்யும் இந்தப் புரட்சி, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். மேலும், வாக்களித்த பிறகு அதனைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா மற்றும் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், இளம் வாக்காளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b