தொப்பை கணேஷ் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த வழக்கறிஞர்கள் போலீஸாரிடம் தகராறு - போலீஸார் விசாரணை
சென்னை, 18 மார்ச் (ஹி.ச.) சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் விஜயகுமார் குடும்பத்தினரை கட்டி போட்டு 25 லட்சம் பணம், 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான எம்கேபி நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவா
Gane


சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)

சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் விஜயகுமார் குடும்பத்தினரை கட்டி போட்டு 25 லட்சம் பணம், 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான எம்கேபி நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியும் ரவுடியுமான தொப்பை கணேஷ்சை போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி ரவுடி தொப்பை கணேஷ் மாதவரம் மஞ்சம் பாக்கம் சின்ன ரவுண்டானா அருகே உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக திருவிக நகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று தொப்பை கணேஷ் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து அவரை கைது செய்ய முயன்றனர்.

அப்போது ரவுடி தொப்பை கணேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இரு காவலர்களை வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து மாதவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ரவுடி தொப்பை கணேஷ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை அடுத்து நேற்று மாலை ரவுடி தொப்பை கணேஷ் இறுதி ஊர்வலத்தில் நடைபெற்றது. இந்த இறுதி ஊர்வலத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த ரவுடிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொப்பை கணேஷ் உடல் புளியந்தோப்பு மேல் பட்டி பொன்னப்பன் தெரு வழியாக கொண்டு சென்ற போது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர் சாலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் தீபன் சாலையில் பட்டாசு வெடிக்க கூடாது என சம்மந்தப்பட்டவர்களிடம் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உதவி ஆய்வாளர் தீபனிடம் வீண் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது அருகில் இருந்த ஆய்வாளர் ரஜினிகாந்த் அவர்களை சமாதானம் செய்ய முயன்ற போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து போலீஸார் மூவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ்வரன் என்ற சரவணன் (39), பரத்(35), சுகுமார் (31) என்பதும் இவர்கள் மூவரும் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீஸார் மூவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ