Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 18 மார்ச் (ஹி.ச.)
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக முடிவடைவதற்கு முன்பே, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யுமாறு அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23ஆம் தேதி கடைசி நாள் என்பதால், கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்கவும், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தங்களது பிடியை வலுப்படுத்தவும் இந்த முடிவை திமுக எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
அதே சமயம் தொகுதிப் பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் திரும்பப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய மூன்றாம் நாளான இன்று (18.03.2026) புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் எம்.எல்.ஏ. சம்பத் சாரம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
கட்சியின் தலைமை கழக அறிவுறுத்தலின் படி அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறோம் எனச் சம்பத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b