Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், சி. காமராஜ், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோருக்கு எதிராக தனித் தனியாக வழக்குகளை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில் எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது, சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், எல் இடி பல்புகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதே போல், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி,கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் , சி.விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி உள்ளிட்டோர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன.
இவர்கள் மட்டுமல்லாமல், தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, சேலம் இளங்கோவன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு போன்றவற்றின் விசாரணையும் நிலுவையில் உள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டால் மட்டுமே வழக்கை தொடர முடியும் என்று சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் பண மோசடி, வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்தது, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் இவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய முடியும்.
மேலும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் உள்ளதால், சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரமும் உள்ளது.
எனவே, சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN