மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் - சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை, 18 மார்ச் (ஹி.ச.) நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Madras High Court


சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மணிவண்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 2011- ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 7 கோடியே 68 லட்சம் மாற்றுத்திறனாளிகள் நாட்டில் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான கல்வி, உயர்க்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியும் முறையாகக் கிடைக்கவில்லை. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் கடந்த 2023-2024-ம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும், தொகுதி மறுவரையறை சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது. அதனால், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசுக்கு அளித்த கோரிக்கை ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. சட்ட திருத்தம் கொண்டு வரும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது.

அதை நீதிமன்றம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.

சம்மந்தப்பட்டத் துறை அதிகாரிகளை அணுகி இட ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் கோரிக்கை வைக்கலாம் எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN