Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 18 மார்ச் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் அன்பரசன் (57) கடந்த 15ம் தேதி காலை 8 மணிக்கு காவேரிப்பட்டணம்-பாலக்கோடு சாலையில் கருக்கன்சாவடி பகுதியில் டூவீலரில் தனது அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது பின்னால் அதிவேகத்தில் வந்த பைக், அன்பரசன் மீது மோதியதில் தடுமாறி விழுந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காது மற்றும் மூக்கு வழியாக ரத்த வழிந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அன்பரசன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், உயிர் பிழைப்பது கடினம் எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் மீண்டும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்ததால் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி மற்றும் மகன்கள் விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நேற்றிரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2 கண்கள், 2 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது. இதனை தர்மபுரி, சேலம், கோவை அரசு மருத்துவமனை குழுவினர் வந்து பெற்றுச்சென்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் அன்பரசன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சத்யபாமா, கண்காணிப்பாளர் சந்திரசேகரன், நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் மருத்துவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அன்பரசனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து காவேரிப்பட்டணம் இடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b