Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 18 மார்ச் (ஹி.ச)
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து தினமும் பெரிய மாரியம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுத்தருளி வீதி உலா வந்தார். பல்வேறு மண்டபங்களிலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா இன்று மதியம் 1:35 மணிக்கு மேல் துவங்குகிறது. இதற்காக கோவிலில் நிர்வாக அதிகாரி ஜோதிலட்சுமி தலைமையில் பல்வேறு சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக பூக்குழி இறங்கும் பக்தர்கள் கையில் காப்புகளை கட்டிக்கொண்டு பல்வேறு வீதிகள் வழியாக வந்து வரிசையாக நின்று பூக்குழி இறங்குவது வழக்கம். பக்தர்கள் நெரிசலை தவிர்ப்பதற்காக பூக்குழி இறங்கும் ஆண், பெண் பக்தர்களுக்கு தனித்தனியாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு தண்ணீர், மோர் ஆகியவை வழங்க பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வரிசையில் நிற்கும்போது, வெயிலின் தாக்கம் படாமல் இருக்க 1000 சாக்குகள் வாங்கி வரப்பட்டு தண்ணீரில் நனைத்து பக்தர்கள் நிற்கும் இடத்தில் போடப்படும். பக்தர்கள் நிற்கும் இடத்தில் மேலே இருந்து தண்ணீர் விழும் வகையில் சவர் அமைக்கப்பட உள்ளது என நிர்வாக அதிகாரி ஜோதிலட்சுமி தெரிவித்துள்ளார்.
பூக்குழி திருவிழாவில் பாதுகாப்பு பணியில் சுமார் 31 கேமராக்கள் வைக்கப்பட்டு, அதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்களும் மற்றும் கோயிலைச் சுற்றி வருபவர்களையும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பூக்குழி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம், நகர் இன்ஸ்பெக்டர் ராஜதுரை, கிருஷ்ணன் கோயில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் உட்பட பாதுகாப்பு பணியில் சுமார் 400 போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b