Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 18 மார்ச் (ஹி.ச.)
புதுவையில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுவை தேர்தல் பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், அஞ்சலி நிமல்கர் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் ஆகியோருடன் இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
தொடர்ந்து திமுக தலைமையை தொடர்புகொண்டு, தொகுதி எண்ணிக்கை, தொகுதியையும் முடிவு செய்கின்றனர். தொகுதி உடன்பாடு, வேட்பாளர் அறிவிப்பு இன்று இரவே வெளியாகும் என தெரிகிறது.
திமுக தரப்பில் நிலைப்பாடு தொடர்பாக புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின் காட்டியுள்ள கூட்டணி தான் எங்களுக்கு. அவர் வழிதான் எங்களுக்கு. தனியாக வழி ஏதும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக அதே கூட்டணிதான். இழுபறிக்கு காரணம் எங்கள் இருவருக்கும் உள்ள கோரிக்கைகள்தான்.
பேசி தான் தீர்க்க முடியும். நாளைக்குள் எல்லாம் இறுதியாகிவிடும். கூட்டணிக்கு தலைமை திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் ராகுலும் தான். காங்கிரஸார் கோரிக்கைகளை சொல்லிவிட்டனர். தலைவர் சீக்கிரம் கூட்டணி பிரச்சினையை முடித்து விடுவார். அவரவர் ராசி தகுந்தாற்போல், நேரம் தகுந்தாற்போல் வேட்பு மனுதாக்கல் செய்கிறார்கள்.
தமிழக முதல்வர் முன் மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்றி உள்ளார். அவரது தொண்டர்கள் அச்சாயலை புதுச்சேரிக்கு கொண்டு வருவார்கள்.
30 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சில சமிக்ஞைகள் கொடுத்துள்ளோம்.
அதன்படி மனுதாக்கல் செய்கிறார்கள். தொகுதி பங்கீடுக்கு பிறகு காங்கிரஸார் தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்தால் வாபஸ் வாங்குவீர்களா என்று கேட்கிறீர்கள்.
எங்கள் தலைவர் சொல்வதைச் செய்வோம்.
இவ்வாறு திமுக மாநில அமைப்பாளர் சிவா கூறினார்.
Hindusthan Samachar / vidya.b