Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை நிலைநாட்டவும், முறையற்ற பணப் புழக்கத்தைத் தடுக்கவும் பறக்கும் படைகள் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.
பறக்கும் படைகள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றும் பணியில் இவை ஈடுபட்டுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 மார்ச் 2026 அன்றைய நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ. 42.65 கோடி ஆகும்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
ரொக்கம்: ரூ.2.37 கோடி
மதுபானம்: ரூ.0.18 கோடி
போதைப்பொருட்கள்: ரூ.2.88 கோடி
விலைமதிப்பற்ற உலோகங்கள்: ரூ.16.42 கோடி
இலவசங்கள் / பிற பொருட்கள்: ரூ. 20.80 கோடி
தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b