Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)
விளாத்திகுளம் கிராமத்துக்கு சென்று வந்ததிலிருந்து என் மனம் மிகுந்த கனத்துடனும் எண்ணற்ற கேள்விகளுடனும் இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நேற்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமத்துக்கு சென்று வந்ததிலிருந்து என் மனம் மிகுந்த கனத்துடனும் எண்ணற்ற கேள்விகளுடனும் இருக்கிறது.
நல்ல மதிப்பெண்கள் பெற்று படித்த ஒரு மாணவி, பத்தாம் வகுப்பில் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றிருந்தாள். பிளஸ் டூவில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற கனவோடு இருந்த அந்த இளம் பெண், ஒரு நாள் இயற்கை தேவைக்காக வெளியே சென்றபோது திரும்பி வரவில்லை.
அவளைத் தேடி பரிதவித்த பெற்றோர்கள் காவல்துறையினரால் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அரசு பெரிதாக கவனம் செலுத்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
கப்பலில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்ந்த அந்தப் பெண்ணின் கனவு நொறுங்கிப் போயுள்ளது. அவளின் மரணத்திற்கும், அந்தக் குடும்பத்தின் துயரத்திற்கும் பதில் என்ன என்ற கேள்வி மனதை வதைக்கிறது.
கிராமத்தில் பெண்கள் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கட்டப்பட்ட கழிப்பறைகள் பூட்டப்பட்டு இருப்பது இன்னும் வேதனைக்குரியது.
பெண்களை பாதுகாப்பதா, கழிப்பறைகளை பாதுகாப்பதா என்ற கேள்வி எழுகிறது. அனைவருக்கும் கழிப்பிட வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட தூய்மை பாரத திட்டம் நடைமுறையில் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அரசியல் விவாதங்கள் வேறு திசையில் சென்று கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு, அவர்களின் அடிப்படை தேவைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகின்றன.
ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் கூட உரிய அளவில் கண்டிக்கப்படாமல், அரசியல் ஆதாயங்களுக்கான விவாதங்கள் முன்னிலைப்படுத்தப்படுவது ஆரோக்கியமான நிலை அல்ல.
உண்மையான பிரச்சினைகளை மறைத்து, உணர்ச்சி தூண்டும் விவாதங்கள் அரசியலில் மேலோங்குகின்றன. இதனால் சமூக நியாயம் பாதிக்கப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பு என்பது அரசியலைத் தாண்டிய ஒரு பொறுப்பு. அது ஓட்டு வங்கியைத் தாண்டி பார்க்க வேண்டிய ஒரு முக்கிய கடமை.
பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும், அவர்களின் கண்ணீரையும் துடைக்க சமூகமே ஒன்றிணைய வேண்டும்.
பெண்களின் மரியாதையும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் ஒரு நிலையை உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பு என்பதே இச்சம்பவம் உணர்த்துகிறது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ