Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மார்ச் (ஹி.ச)
சென்னை வேப்பேரி பகுதியில் மூதாட்டியின் கவனத்தைத் திசை திருப்பி தங்க நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சூளை ஆண்டியப்பன் நாய்க்கன் தெருவில் வசித்து வரும் காளியம்மாள் (76) என்பவர் கடந்த 17.03.2026 காலை வி.வி. கோவில் அருகே உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரமலான் மாதம் காரணமாக ஏழைகளுக்கு நகை மற்றும் பணம் வழங்கப்படுவதாக நம்பிக்கை அளித்து பேச்சில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வி.வி. கோவில் தெருவில் உள்ள பூட்டிய கடை அருகே அமர வைத்து, காதில் அணிந்திருந்த சுமார் 1 சவரன் எடையுள்ள மாட்டலுடன் கூடிய தங்க கம்மல் மற்றும் ரூ.1,200 பணத்தை வாங்கி ஏமாற்றி தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் G-1 வேப்பேரி காவல் நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட திருமலை (50) என்பவரை 18.03.2026 அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 8½ கிராம் எடையுள்ள மாட்டலுடன் கூடிய தங்க கம்மல் மீட்கப்பட்டது.
மேலும், இதே நபர் 16.03.2026 அன்று திரு.வி.க. நகர் பகுதியில் மற்றொரு மூதாட்டியையும் இதே முறையில் ஏமாற்றியதும், இவர்மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளதும் போலீசார் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ