தேர்தல் நடத்தை விதிகள் எதிரொலி - திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி திருவிழா கலைநிகழ்ச்சிகள் ரத்து
மதுரை, 19 மார்ச் (ஹி.ச.) அறுபடை வீடு கொண்ட முருகபெருமானின் முதற்படை வீடு மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் ஆகும். கிருத்திகை, சஷ்டி போன்ற முருப்பெருமானுக்கு உகந்த நாட்களில் மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும்
Cultural Programs


மதுரை, 19 மார்ச் (ஹி.ச.)

அறுபடை வீடு கொண்ட முருகபெருமானின் முதற்படை வீடு மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் ஆகும். கிருத்திகை, சஷ்டி போன்ற முருப்பெருமானுக்கு உகந்த நாட்களில் மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி திருவிழாவின்போது சன்னதிதெருவில் 16 கால் மண்டபம் வளாகத்தில் 15 நாட்களும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல் லூரி மாணவ, மாணவிகளின் ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்திட உபயதாரர்கள் முன்வந்தனர். வழக்கம் போல உபயதாரர்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளுக்காக சிறப்பு அழைப்பிதழ் தயார்படுத்தும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிக்கு உட்பட்டு பங்குனி திருவிழாக்கான கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பக்தி சொற்பொழிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் வருகிற 23-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை 15 நாட்களும் வழக்கம்போல பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b