டெல்லி பயணத் திட்டம் குறித்து நாளை விரிவாக சொல்கிறேன் - எடப்பாடி பழனிசாமி
புதுடெல்லி, 19 மார்ச் (ஹி.ச) வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தொகுதிப் பங்கீடு பேச்
Edappadi Palaniswami


புதுடெல்லி, 19 மார்ச் (ஹி.ச)

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான முக்கியக் கட்டப் பேச்சுவார்த்தை நாளை (20.03.2026) நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதற்காக தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் விரைவில் சென்னை வரவுள்ளார்.

தொகுதி பங்கீட்டில் பாஜகவுக்கு 27 முதல் 29 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளை பா.ஜ.க. கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (19.03.2026) காலை 10 மணியளவில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முற்பட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, டெல்லி பயணத் திட்டம் குறித்து நாளைக்கு (20.03.2026) விரிவாக சொல்கிறேன் எனத் தெரிவித்துவிட்டு சிரித்தப்படியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

மேலும்,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஆனால் இன்னும் நேரம் ஒதுக்கவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்த பயணத்தின் போது சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி வியூகங்களை இறுதி செய்வது முக்கிய நோக்கமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதற்காக எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோரை இன்று மாலை சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தச் சந்திப்பின் போது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b