சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதியில் 42 சட்டவிரோத ரிசார்ட்களுக்கு சீல் – சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை
ஈரோடு, 19 மார்ச் (ஹி.ச.) ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ரிசார்ட்கள் காரணமாக மலைப்பகுதி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கோவையைச் சேர்ந்த ஒரு விழிப்புணர்வு அமைப்பு சென்னை உய
Resort


ஈரோடு, 19 மார்ச் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ரிசார்ட்கள் காரணமாக மலைப்பகுதி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கோவையைச் சேர்ந்த ஒரு விழிப்புணர்வு அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புலிகள் சரணாலய எல்லைக்குள் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை அகற்றி உடனடி நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியில் உள்ள 53 ரிசார்ட்கள் மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதில், 42 ரிசார்ட்கள் எந்தவித அனுமதியும் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவை அனைத்தும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதாக வனத்துறை தெரிவித்தது.

இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Hindusthan Samachar / P YUVARAJ