அரசு பேருந்தை வழிமறித்து ஆபாசமாக செய்கை செய்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது
மதுரை, 19 மார்ச் (ஹி.ச.) மதுரையில் அரசு பேருந்தை வழிமறித்து ஆபாசமாக நடந்து கொண்ட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை திருமலை நாயக்கர் மஹால் பேருந்து நிறுத்தம் அருகே நேற்றுமுன்தினம் அதிகாலை நேரத்தில் பைக்கில் வந்த இ
Arrest


மதுரை, 19 மார்ச் (ஹி.ச.)

மதுரையில் அரசு பேருந்தை வழிமறித்து ஆபாசமாக நடந்து கொண்ட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை திருமலை நாயக்கர் மஹால் பேருந்து நிறுத்தம் அருகே நேற்றுமுன்தினம் அதிகாலை நேரத்தில் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அரசு பேருந்தை வழிமறித்து தகராறு செய்ததுடன், ஆபாசமாக செய்கை காட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தெற்குவாசல் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் சுப்புராயர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த குமார் (24) மற்றும் பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த அபிஷேக் (25) ஆகிய இருவரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இருவர்மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN