சோழவந்தானில் பலத்த காற்று மற்றும் கனமழை - மரங்கள் வேரோடு சாய்ந்தது
மதுரை, 19 மார்ச் (ஹி.ச.) மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சோழவந்தான் பகுதியில் தொடர்ந்து வீசும் பலத்த காற
Tree


மதுரை, 19 மார்ச் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும்

கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சோழவந்தான் பகுதியில் தொடர்ந்து வீசும் பலத்த காற்றால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளின் குறுக்கே விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

இந்த நிலையில் தகவல் கிடைத்ததும் சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, சாலைகளில் குறுக்கே விழுந்திருந்த மரங்களை மெஷின் ரம்பம் உதவியுடன் வெட்டி அகற்றினர். போக்குவரத்து சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

மழை மற்றும் பலத்த காற்று காரணமாக விவசாயத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் காற்று மற்றும் மழையால் சேதமடைந்துள்ளன. அதேபோல் கொடிக்கால் வெற்றிலை பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் வாழைத் தோட்டங்களும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறி, அரசு உடனடியாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பகல் முதல் மாலை வரை பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ச்சியான கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சோழவந்தான் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN