Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)
சென்னையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெயிலுக்கு இடையே நள்ளிரவில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏற்பட்ட இந்த கோடை மழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னை தியாகராய நகர், மாம்பலம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் போன்ற சென்னையின் முக்கிய இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
அதே போன்று ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, அனகாபுதூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.
அதோடு வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, சென்னையில் இன்றும் (19.03.2026) நகரின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸ்ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை தவிர்த்து தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களிலும் வரும் நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (19.03.2026) காலை 7:00 மணியளவில் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி,
தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 10:00 மணி வரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்குதல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b