Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மார்ச் (ஹி.ச)
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் அரசு தேர்வுக்கு படித்து வருகிறார். என்ஜினியரிங் முடித்துள்ள சுந்தரமூர்த்தியின் தந்தை ராஜேந்திரனுக்கு தெரிந்த நண்பர் மாயகிருஷ்ணன் மூலம் நசீர் என்பவர் பழக்கமாகியதாக தெரிகிறது.
மேலும் நசீர் அகமது தனது அண்ணன் பஷீர் அகமது என்பவர் திமுக கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பதால் அவருக்கு அமைச்சர்கள் பலர் மிகவும் நெருக்கம் என்பதனால் அவர் மூலமாக நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாங்கி தருகிறேன் அதற்கு 10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
சுந்தரமூர்த்தியும் ஒப்புக்கொண்டு கடந்த 20.08.22 ஆம் தேதி மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் அருகில் வைத்து ரூபாய் 2 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. அதன் பிறகு வெவ்வேறு இடங்களில் இதுவரை 10 லட்சம் பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு நசீர் அகமதுவும் , பஷீர் அகமதுவும் வேலையை வாங்கித்தரவில்லை. இதற்கிடையில் சுந்தரமூர்த்தியின் தந்தை ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.
பணத்தை பலமுறை கேட்டும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததால் கடந்த 2025 ஆம் வருடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுந்தரமூர்த்தி புகார் அளித்தார்.
அந்த புகார் குறித்து விசாரிக்கும்படி மதுரவாயல் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் கிடப்பில் போடப்பட்ட நிலையில் மீண்டும் இந்த ஆண்டு சனவரி 31ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் சுந்தரமூர்த்தி, அதன் பேரில் மீண்டும் விசாரித்த மதுரவாயல் போலீசார் இது குறித்து விசாரித்த போது நசீர் அகமது
சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு உறுப்பினர் என்பதும் தெரிந்தது. மேலும் அவரது சகோதரர் பஷீர் அகமது திமுக சிறுபான்மை பிரிவு மாநில இணைச் செயலாளராக இருப்பதும் தெரிய வந்தது. இவர் தேசிய தலைவர் என்ற திரைப்படத்தில் முத்துராமலிங்கத் தேவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து மதுரவாயல் போலீசார் இருவர் மீதும் நம்பிக்கை மோசடி, பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ