Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 19 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச்
சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து இரவு வேளையில்
அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக் கழிக்க சென்று காணாமல் போன நிலையில் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஒரு நாள் முழுவதும் தேடி அலைந்தனர்.
இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி அதே காட்டுப் பகுதியில் உடலில் பல்வேறு இடங்களில்
காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்
உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின்
பேரில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து மாணவியின் உறவினர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதி அருகே வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்கள் பள்ளி மாணவர்கள் என
சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றதுடன் கிராமம் முழுவதும் வீடு வீடாக சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.
இருப்பினும் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை தொடர்ந்து திணறி வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேருக்கு டிஎன்ஏ மருத்துவ பரிசோதனையும் காவல்துறையினர் எடுத்து அதன் முடிவுகளுக்கு
காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர்
சுந்தரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய விசாரணை
தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு
காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சம்பவம் நடந்த அன்று அந்தப்
பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் கடந்து இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த
இருசக்கர வாகனத்தின் நம்பரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்டுபிடித்ததில்
அந்த இருசக்கர வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து மர்ம
நபரால் திருடி கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது. அந்த இருசக்கர வாகனம் திருடு
போயிருப்பதாக காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்ற காவல்துறையினர் அங்கே இருசக்கர
வாகன சிசிடிவி குறித்து ஆய்வு செய்ததில் அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்
திருடி வந்திருப்பது தெரிய வந்தது திருடிய இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் அந்த
காட்டு பகுதிக்கு எதற்கு வந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம
நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக
விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு கிராம மக்கள் யாரேனும் உதவி செய்தனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை
நெருங்கி விட்டதாகவும் விரைவில் கைது செய்யப்படுவர் என்ன காவல்துறை தரப்பில்
கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் மாணவியின் உடலை வாங்கி அடக்கம் செய்ய மாணவியின் பெற்றோரிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய
குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் மாணவியின் உடலை வாங்கி அடக்கம் செய்ய தயாராக இருக்கிறோம் என பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam