Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)
சென்னையில் மே 17 இயக்கத்தின் சார்பில் இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பார்க் ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை, இந்த இயக்கத்தினைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற சிவா திலீபன் கடந்த 11ஆம் தேதி (11.03.2026) அழித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் நடைமேடையில் அருகே உள்ள தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த ரயிலின் முன் ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என முழக்கமிட்டவாறே தண்டவாளத்தில் இறங்கினார்.
இதனால் ரயில் மோதி படுகாயமடைந்த சிவா திலீபன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.
சிவா திலீபன், நேற்று (18.03.2026) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் மறைந்த சிவா திலீபனுக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
இந்தி திணிப்பை எதிர்த்து, ரயில் நிலையத்தில் இந்தி பெயரழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்க செயல்பாட்டாளர் தோழர் சிவா திலீபன் எனும் திரு. சிவக்குமார் அவர்கள், தமிழ்நாட்டின் மொழி உரிமைக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கும் செய்தி மன வேதனையைத் தருகிறது.
தோழர் சிவக்குமார் அவர்களின் தியாகம், தமிழக மொழி உரிமைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நிலைக்கும்; என்றென்றும் போற்றப்படும்! அவரின் தியாகத்தை நினைவுகூரும் இத்தருணத்தில், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை எக்காரணத்தைக் கொண்டும் கைவிட மாட்டோம்.
அதனை சீரிய அரசியல் போராட்டங்களின் மூலம் நிலைநாட்டுவோம்; இனி, ஒரு உன்னத உயிரும் அதற்காக நாம் இழக்கக் கூடாது என்று உறுதியேற்போம்.
தோழர் சிவக்குமார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், மே 17 இயக்கத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மொழி உரிமைப் போராளி தோழர் சிவக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b