பாஜக தேர்தல் அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை, 19 மார்ச் (ஹி.ச.) சென்னையில் தமிழக பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தில் இன்று தெலுங்கு புத்தாண்டு (உகாதி) விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர
பாஜக தேர்தல் அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்


சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)

சென்னையில் தமிழக பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தில் இன்று தெலுங்கு புத்தாண்டு (உகாதி) விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது,

தமிழகத்தில் கன்னட மற்றும் தெலுங்கு பேசும் மக்களுக்கு யுகாதி நல்வாழ்த்துகள்.

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பல மொழி பேசும் மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் அனைவரையும் இணைக்கும் கருத்தாக இருந்த திராவிடம், அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு, தமிழர் அடையாளம் மறைக்கப்படுகிறது.

ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் யுகாதி வாழ்த்துக்களிலும்கூட பிரிவினையை உருவாக்கியுள்ளனர். தமிழர்களின் அடையாளம் மங்கிக் கொண்டிருக்கிறது. கீழடிக்கு முதன்முதலில் அதிக நிதி ஒதுக்கியது பிரதமர் மோடிதான், அதனை மறைத்து வேறு விதமாக பிரதமர் மோடியை விமர்சிக்கின்றனர்.

இந்தி மொழி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை சிலர் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்துகிறார்கள், இதனை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது விளாத்திகுளம் சம்பவத்திலிருந்து தெரிகிறது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழுத்தம் இல்லை என கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது. முன்பு ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி தற்போது ஐந்து தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவது இதற்கு உதாரணம்.

பாஜகவை காரணம் காட்டி கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் குறைக்கப்படுகின்றன.

கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்திப்பது இயல்பான ஒன்று. எடப்பாடி பழனிச்சாமியின் தில்லி பயணமும் அது போன்றதே.

விளாத்திகுளம் மாணவி படுகொலைக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஒரு வார்த்தை தவறாக பேசப்பட்டதற்காக போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், உயிரிழப்பு சம்பவங்களில் மௌனம் காக்கின்றன.

மேலும், ஓபிஎஸ் தனது கொள்கைகளை மறந்துவிட்டார் அவரைப் பற்றி பேச விருப்பமில்லை.

பாஜக தேர்தல் அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது. இன்று மாலை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b