இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் - சென்னையில் இன்று 3வது நாளாக 36 விமானங்கள் ரத்து
சென்னை, 02 மார்ச் (ஹி.ச.) இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வருவதால், மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு இயக்கப
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் - சென்னையில் இன்று 3வது நாளாக 36 விமானங்கள் ரத்து


சென்னை, 02 மார்ச் (ஹி.ச.)

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வருவதால், மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், புறப்பாடு விமானங்கள் 12 என, மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

2-ம் நாளான நேற்று சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பஹ்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட 17 புறப்பாடு விமானங்கள், இந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்கள் மொத்தம் 33 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், போர் பதற்றத்தால் 3-வது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புறப்பாடு விமானங்கள் 18 மற்றும் வருகை விமானங்கள் 18 என மொத்தம் 36 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே மற்ற விமானங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கும் பயணிகளும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானம் வந்து செல்லும் நேரம் உள்ளிட்டவைகளை கேட்டு தெரிந்து கொண்டு தங்கள் பயணத்தை அமைத்து கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

லண்டன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள் ஈரான், மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், மாற்று பாதைகளில் விமானங்கள் சுற்றி வந்து மீண்டும் புறப்பட்டு செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஏற்படலாம் என்பதால், அந்த விமானங்கள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

Hindusthan Samachar / vidya.b