Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 02 மார்ச் (ஹி.ச.)
திமுக அரசுகை கையூட்டு பெற்று சான்று வழங்குவதாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது;
சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் திமுக அரசு எந்த அளவுக்கு விஞ்ஞானப்பூர்வமான ஊழல்களை செய்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
ஒப்பந்தம் வழங்குவதில் வெளிப்படைத் தன்மை என்று ஒருபக்கம் கூறிக் கொண்டு, இன்னொரு பக்கம் கையூட்டு கொடுத்தால் மட்டுமே ஒப்பந்தம் என்ற ‘சிஸ்டத்தை’ திமுக அரசும், சென்னை மாநாகராட்சியும் ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் நடைபெறும் நவீன ஊழல் தொழில்நுட்பத்தை தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் கட்டுமானப் பணிகளுக்கு இ&டெண்டர்களை தாக்கல் செய்யும் ஒப்பந்ததாரர்கள் அத்துடன் கள ஆய்வுச் சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற புதிய முறையை கடந்த இரு ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய நடைமுறைப்படி கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியை ஒப்பந்தம் கோரும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கான மாநகராட்சி செயற்பொறியாளரை அழைத்துச் சென்று களச்சூழலை ஆய்வு செய்ய வேண்டும்.
அதன்பின் களச்சூழலை சம்பந்தப்பட்ட நிறுவனம் நன்கு அறிந்து கொண்டிருப்பதாக கண்காணிப்புப் பொறியாளர் சான்றிதழ் அளிப்பார்.
அந்த சான்றிதழை ஒப்பந்தம் கோரும் நிறுவனங்கள் இ&டெண்டர் ஆவணங்களுடன் சேர்த்து பதிவேற்றம் செய்தால் மட்டுமே தொழில்நுட்பத் தகுதிக்கான ஆய்வில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தேர்ச்சி பெற முடியும் என்று தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி செயற்பொறியாளர் வழங்கும் கள ஆய்வுச் சான்றிதழ் அனைவருக்கும் கிடைத்து விடாது.
மாநகராட்சி ஒப்பந்தத்தில் யாரெல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சித் தலைமை விரும்புகிறதோ, அவர்களுக்கு மட்டும் தான் இச்சான்று வழங்கப்படும். இந்தத் துண்டுச் சீட்டு சான்றை பதிவேற்றாத நிறுவனங்கள் தொழில்நுட்பத் தகுதிச் சுற்றில் வெளியேற்றப்படும்.
அதன்பின் தங்களுக்கு ஆதாரவான நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களை வழங்கும். இது தான் திமுகவின் நவீன விஞ்ஞான ஊழல் முறையாகும்.
அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கான டெண்டர் நடைமுறைகளில் பெருமளவில் ஊழல்கள் நடப்பதாக காலம் காலமாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன.
இன்னும் சில இடங்களில் ஆளுங்கட்சியினரைத் தவிர வேறு எவருக்கு டெண்டர் ஆவணங்கள் வழங்கப் படுவதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து தான் டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில் இ&டெண்டர் முறை சுமார் பத்தாண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.
தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் இ&டெண்டர் முறையில் ஒப்பந்தப்புள்ளிகளை தாக்கல் செய்யலாம்; அவ்வாறு தாக்கல் செய்யும் நிறுவனங்களுக்கும், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை; குறைந்த தொகையை குறிப்பிட்டுள்ளவர்களுக்கு வெளிப்படையான முறையில் ஒப்பந்தம் வழங்கப்படும் என்பது தான் இ & டெண்டர் முறையின் சிறப்பு ஆகும்.
ஆனால், அதை சிதைத்து ஒப்பந்தம் வழங்கும் மாநகராட்சியின் அதிகாரிகளையும், ஒப்பந்தம் கோரும் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கச் செய்து பேரம் நடத்துவதற்கான வாய்ப்பைத் தான் கள ஆய்வுச் சான்றிதழை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ஏற்படுத்துகிறது. இந்த முறையில் ஊழல் நடப்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.
2024&ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் இ &டெண்டருடன் கள ஆய்வுச் சான்றை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை ஒவ்வொரு பணிக்கான ஒப்பந்தமும் மாநகராட்சியால் குறிப்பிடப்பட்டதை விட குறைவான தொகைக்கே வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், 2024&ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் மாநகராட்சியால் குறிப்பிடப்பட்டதை விட 7% முதல் 12.51% வரை கூடுதல் தொகைக்கு வழங்கப்பட்டுள்ளன. 2025&ஆம் ஆண்டிலும் இதே முறையில் ஊழல் நடைபெற்றுள்ளது.
திமுக என்றாலே விஞ்ஞானப்பூர்வ ஊழல் தான் என்பதற்கு சர்க்காரியா ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ள கருத்துகளே சாட்சி. விஞ்ஞானப்பூர்வ ஊழல்களை காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய அவதாரத்தில் திமுக அரசு தொடர்ந்து வருகிறது என்பதற்கு சான்று தான் கள ஆய்வுச் சான்று எனப்படும் துண்டுச்சீட்டு ஊழல்.
ஊழலை ஒழிப்பதற்காக இ&டெண்டர் போன்ற வெளிப்படைத்தன்மை நடைமுறைகள் கொண்டு வரப்பட்டாலும் அதிலும் ஊழலுக்கான வழிமுறைகள் புகுத்துவது தான் திமுகவின் வழக்கம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
ஆற்றுமணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, பணி நியமன ஊழல், பணியிட மாற்ற ஊழல், மதுபான வரி ஏய்ப்பு ஊழல், பாட்டிலுக்கு 10 ரூபாய் ஊழல் என திமுக ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடிக்கும் கூடுதலாக ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக மக்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டுவதை அனுமதிக்க முடியாது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்தின் பிடியிலிருந்து வேண்டுமானால் ஊழல் திமுக தப்பிக்கலாம்.
ஆனால், இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தண்டனையிலிருந்து திமுக தப்பிக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam