சென்னையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் 3-வது நாளாக ரத்து
சென்னை, 02 மார்ச் (ஹி.ச.) ஈரான் போர் பதற்றம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 18 புறப்பாடு விமானங்கள் 18 வருகை விமானங்கள் என மொத்தம் 36 விமானங்கள் இன்று ரத்த
Chennai International Airport


சென்னை, 02 மார்ச் (ஹி.ச.)

ஈரான் போர் பதற்றம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 18 புறப்பாடு விமானங்கள் 18 வருகை விமானங்கள் என மொத்தம் 36 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து திடீர் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், ஈரானும் பதிலுக்கு அமெரிக்காவின் ஏவுதளங்கள் இருக்கும் பகுதிகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சனிக்கிழமை முதல் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதனையடுத்து ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய வான்வழிப் பகுதிகளை மூடிவிட்டன. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை (பிப்.28) துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் 16 வருகை விமானங்கள், 12 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

நேற்றும் (மார்.1) இரண்டாவது நாளாக தொடர்ந்து வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும், அங்கிருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் என மொத்தம் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் மூன்றாம் நாளான இன்றும் சென்னையிலிருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்படும் 18 புறப்பாடு விமானங்கள், அந்த நாடுகளிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 18 வருகை விமானங்கள் என மொத்தம் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

‘பொதுமக்களின் பாதுகாப்பு கட்டாயம்’ - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அழைத்து பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாளுக்கு நாள் போரின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதேபோல், லண்டன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னை வரும் நிறைய விமானங்கள், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிகளை கடந்து வரவேண்டி உள்ளது.

தற்போது அந்த நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால் விமானங்கள் மாற்றுப் பாதைகளில் சுற்றி வருகின்றன. இதனால் அவை சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்வதற்கு பல மணி நேரம் ஆகலாம் அல்லது விமானம் ரத்து செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்போர், குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யவிருக்கும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தங்களுடைய விமானங்கள் வரும் நேரம், மீண்டும் சென்னையிலிருந்து புறப்பட்டு செல்லும் நேரம் ஆகியவற்றை தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் தங்கள் பயணங்களை அமைத்துக்கொள்ளும் படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேசமயம், சென்னையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, லண்டன், தாய்லாந்து ,ஜெர்மன், ஹாங்காங் உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

ஆனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN