குன்னூர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
நீலகிரி, 02 மார்ச் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் குன்னூர் பெட்போர்டு பகுதியில் தலைமை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தலைமை தபால் நிலைய வளாகத்திலேயே தனி அறையில் பாஸ்போர்ட் சேவை மையம் இயங்கி வருகிறது. தினமும் பொதுமக்கள் பாஸ்போர்ட் தொடர்பான
Coonoor Passport Office


நீலகிரி, 02 மார்ச் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் குன்னூர் பெட்போர்டு பகுதியில் தலைமை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த தலைமை தபால் நிலைய வளாகத்திலேயே தனி அறையில் பாஸ்போர்ட் சேவை மையம் இயங்கி வருகிறது.

தினமும் பொதுமக்கள் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளுக்காக அதிக அளவில் இந்த அலுவலகத்தை அணுகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரியாத நபர் ஒருவர் இ-மெயில் மூலம் மிரட்டல் அனுப்பியுள்ளார்.

இந்த தகவலை பார்த்த பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மேல் குன்னூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து அலுவலக வளாகத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் உதகமண்டலத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படை வரவழைக்கப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் பாஸ்போர்ட் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

அலுவலக அறைகள், சுற்றுப்புறம் மற்றும் தபால் நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீண்ட நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில், அலுவலக வளாகத்தில் எவ்வித வெடிகுண்டு பொருள்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தாலும், பாதுகாப்பு காரணங்களால் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார், எந்த இடத்திலிருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்பது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் வருகை தரும் அரசு அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இந்த சம்பவம் மேல் குன்னூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN