Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 02 மார்ச் (ஹி.ச.)
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் மற்றும் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு கடிதத்தை அனுப்பியுள்ளது.
அதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஷியா பிரிவு அமைப்புகள் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.
எனவே, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தூதரகங்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டும் வகையில் உரையாற்றும் ஈரான் ஆதரவு தீவிரவாதப் பேச்சாளர்களை (Pro-Iran radical preachers) அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் கண்காணிப்பு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளைக் கண்காணிக்கவும், ஈரான் ஆதரவு மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக-அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகளைத் தீவிரமாக கவனிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலங்கள், வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam