அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்
சென்னை, 02 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்


சென்னை, 02 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.

சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது.

அதேபோல் விஜய்யின் த.வெ.க.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இனைந்தது.

இத்தகைய பரபரப்பான சூழலில் மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பொதுக்கூட்டம் நேற்று (01.03.2026) நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தொகுதிப் பங்கீடு குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (02.03.2026) காலை 10.30 மணியளவில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது பா.ஜ.க. மேலிட தலைவர்களுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் 40 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கு, 24 தொகுதிகள் வரை வழங்க அதிமுக முன்வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b