டி20 உலகக்கோப்பை - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா, 02 மார்ச் (ஹி.ச.) டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல நகரங்களில் நடந்து வருகிறது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடந்து வந்தன. இதில் நேற்று நடந்த முக்கியமான ஆட்டத்தில் இந்தியா மற்று
டி20 உலகக்கோப்பை - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி


கொல்கத்தா, 02 மார்ச் (ஹி.ச.)

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல நகரங்களில் நடந்து வருகிறது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடந்து வந்தன.

இதில் நேற்று நடந்த முக்கியமான ஆட்டத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷாய் ஹோப்பும், சேஸும் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்து அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். பிறகு சேஸ் 40 ரன்களும், ஹோப் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். ஹெட்மயர் 27 ரன்களும், ருதர்போர்டு 14 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். இறுதியில் ஹோல்டர், ரோவ்மேன் பவல் அதிரடியாக விளையாட, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினர்.

இந்த ஜோடியில் அபிஷேக் சர்மா 10 ரன்களில் வெளியேற, அடுத்து களம் இறங்கிய இஷான் கிஷன் 10 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களும், அதிரடியாக ஆடிய திலக் வர்மா 27 (15) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு பக்கம் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அடுத்து சஞ்சு சாம்சனுடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஓரளவுக்கு ரன்கள் சேர்த்த பாண்ட்யா 17 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். கடைசியில் சிவம் துபே 8 ரன்களும், அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் மற்றும் சமர் ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

எனவே டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோத உள்ளன.

Hindusthan Samachar / JANAKI RAM