Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மார்ச் (ஹி.ச)
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறைப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளிலிருந்து, 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுத உள்ளனர். இதுதவிர, தனித்தேர்வர்களாக 27,783 பேரும், சிறைக்கைதிகளாக 281 பேரும் தேர்வு எழுதுகின்றனர். ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.
இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.மார்ச் 5-ம் தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலத் தேர்வும், அதனைத் தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான தேர்வுகளும் குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெறும். தேர்வைக் கண்காணிக்கும் பணியில் 44,624 ஆசிரியர்களும், பறக்கும் படையில்
(கண்காணிப்புப் படை) 4,540 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வாழ்த்துக் கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்வின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் இத்தேர்வுகளை மாணவ, மாணவியர்கள் அனைவரும் எந்தவித அச்சமும், பதற்றமுமின்றி எதிர்கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற வேண்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b