Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 02 மார்ச் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எம்.எல்.ஏ, அவரது மகன் பொன். கெளதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது 2012-ஆம் ஆண்டில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விசாரணைக் காலத்தில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லோகநாதன் உயிரிழந்து விட்டார்.
எஞ்சிய 7 பேர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வந்தபோது, முன்னாள் அமைச்சர் க. பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் நீதிபதி முன் ஆஜராகினர்.
அவர்களிடம் குற்றச்சாட்டுகள் குறித்தும், அரசுத் தரப்புகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. மணிமொழி தனித்தனியே கேள்வி எழுப்பினார்.
செம்மண் குவாரியை குத்தகைக்கு எடுத்தது உண்மைதான். ஆனால், அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாகவும், முறைகேடாகவும் செம்மண்ணை எடுக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தங்கள் மீது பொய் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகக் கூறி, பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். இந்த பதிலை முதன்மை மாவட்ட நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, பொன். கெளதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகிய 4 பேரும் எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்தனர்.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவுற்ற நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழி அறிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b