Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 02 மார்ச் (ஹி.ச.)
தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 2-ஆம் தேதி) தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இந்த தேர்வை விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 மையங்களிலிருந்து 11,345 மாணவர்களும், 11,171 மாணவிகளும் என மொத்தமாக 22,516 பேர் எழுதினர்.
முன்னதாக அந்தந்த பள்ளி வளாகங்களில் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்வறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
தொடர்ந்து தேர்வறையில் மாணவ, மாணவிகளுக்கு விடைத்தாள்களும், வினாத் தாள்களும் தேர்வுக்கூட அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டன. பின்னர் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதத் தொடங்கினர்.
தேர்வுப்பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள், வழித்தட உறுப்பினர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என 2,995 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்வுகள் முறையாக நடைபெறுவதற்கு 135 நிலையான பறக்கும்படைகளும் திடீர் ஆய்வு செய்வதற்காக மாவட்ட முதன்மைக் கண்காணிப்பு அலுவலரும், பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் வெ.ஜெயக்குமார்,
முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. அறிவழகன் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் 10 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் அலுவலர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகள் காப்பி அடிப்பதோ அதற்கு உதவியாக இருப்பதோ கூடாது. காப்பி அடிக்கும் மாணவ, மாணவிகளின் மீது அரசுத்தேர்வுகள் இயக்குநரக விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் ரெ .அறிவழகன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b