Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 20 மார்ச் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் கிராமத்தில் 7 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் அமீனுல்லா (65)வின் குடும்பத்தினர், தங்களது வீட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க, பழமையான 6,666 அத்தியாயங்களை 19 பக்கத்தில் அரபி மொழியில் எழுதப்பட்ட குர்ஆன், மெட்டல் டப்பாவில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.
இது வழக்கமான குர்ஆனை போல இல்லாமல், 2.5 இன்ச் அகலமும், 1.75 இன்ச் நீளமும் கொண்ட மிகவும் சிறிய அளவிலான குர்ஆன் புத்தகம் ஆகும்.
இப்புத்தகத்தை ஆய்வுசெய்த இந்திய தொல்லியல் துறை, அது 17ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று சான்று வழங்கியது.
இந்த நிலையில், மன்னம்பந்தல் தனியார் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசியர் ராமலிங்கம் தலைமையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, இயற்பியல், வேதியியல் துறை பேராசிரியர்கள் அந்த குர்ஆனை பார்வையிட்டனர்.
இதுகுறித்து குர்ஆனை ஆய்வு மேற்கொண்டு வரும் இயற்பியல் துறை பேராசிரியர் ராமலிங்கம் கூறியதாவது,
இந்த குர்ஆன் மெட்டல் பாக்ஸ் 78 வகையான உலோகங்களால் உருவாக்கப்பட்டது என்பதை இந்தியாவில் உள்ள காரைக்குடி சிக்கிரி, பெங்களூரு ஐஐஎஸ்சி, ஐஐடி, என்ஐடி, பிஎஸ்ஜி காலேஜ் ஆப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி போன்ற ஆய்வகங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த குர்ஆன் நுண் பிணைப்பு எழுத்து அமைப்பில் எழுதப்பட்டுள்ளது. அதை சாதாரணமாக எழுத முடியாது. அதன் காகிதமானது கார்பன் சுழற்சிமுறை என்ற அளவீடு முறைப்படியும், குர்ஆன் வைக்கப்பட்டுள்ள உலோகப் பெட்டியானது 32 உலோகங்கள் குறைந்த விகிதத்திலும், 46 உலோகங்கள் அதிக விகிதத்திலும் கலக்கப்பட்டு, ஒன்றாக சேர்த்து அதிகப்படியான வெப்பநிலையை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த உலோகப்பெட்டி 2,600 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலையை தாங்கக்கூடியதாக உள்ளது. 2,500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாண்டும்போது கூட இது உருகவில்லை என்பதை ஆராய்ச்சியின் முடிவுகள் தெரியப்படுத்துகிறது.
விண்கலமானது வளிமண்டலத்தை கடக்கும் வகையில், அதன்மேல் செராமிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முலாம் பூசப்படுகிறது. ஆனால் செராமிக் அதிக எடை கொண்டது என்பதால் விண்கலத்தை இயக்க அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.
இந்த எரிபொருள் அளவை குறைக்க, குர்ஆன் வைக்கப்பட்டுள்ள உலோகப்பெட்டி செய்முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எடை குறைவுள்ள விண்கலத்தை தயார் செய்யமுடியும்.
இந்த குர்ஆன் பெட்டியில் கதிர்வீச்சு மற்றும் முலாம் பூச்சு தொழில்நுட்பம் முக்கியமானதாக உள்ளது.
கதிர்வீச்சை வெளிப்படுத்தக்கூடிய உலோகங்களான யுரேனியம், குளுக்கோனியம், தோரியம், கோபால்ட் போன்ற கதிர்வீச்சு தனிமங்கள் எல்லாமே சமநிலையில், எந்தவிதத்திலும் கிளர்ச்சியுறாத வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தான் குர்ஆன் உலோகப்பெட்டியில் தற்போது வரை எந்தவிதமான துருவும் பிடிக்கவில்லை.
17, 18ஆம் நூற்றாண்டுகளில் தான் நிக்கல் பிளேட்டின் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பே 14ஆம் நூற்றாண்டில் இந்த குர்ஆன் உலோக பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குர்ஆன் பெட்டி செய்வதற்கான மண் எங்கிருந்து எடுக்கப்பட்டது. உலோகங்களை எப்படி கலந்தார்கள் என்ற தொழில்நுட்பத்தை ஆய்வு செய்யவேண்டும்.
எதிர்காலத்தில் இதைப்பற்றி பல மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள இருப்பதால், அதை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
இவ்வாறு பேராசிரியர் ராமலிங்கம் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b