குற்றால மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு உடைத்து தகர்க்கப்பட்டது
தென்காசி, 20 மார்ச் (ஹி.ச) தென்காசி மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது குற்றாலமும், குற்றாலத்தில் உள்ள அருவிகளும் தான். இந்த அருவிகளில் குளிப்பதற்காகவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு பல்வேறு மாவட்ட
Courtallam Falls


தென்காசி, 20 மார்ச் (ஹி.ச)

தென்காசி மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது குற்றாலமும், குற்றாலத்தில் உள்ள அருவிகளும் தான்.

இந்த அருவிகளில் குளிப்பதற்காகவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகள் உள்ளிட்டவைகளில் இருந்து வந்து ஆனந்த குளியல் போட்டு செல்வது வழக்கம்.

அந்த வகையில், அனைவரும் அறிந்த குற்றாலம் மெயின் அருவியில் தற்போது பல்வேறு சீரமைப்பு பணிகளானது நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக குற்றாலம் மெயின் அருவிக்கே உரிய அடையாளமாக விளங்கிய மிகப்பெரிய பாதுகாப்பு வளைவானது தற்போது தகர்க்கப்பட்டு வருகிறது.

அதாவது, தண்ணீர் அதிக அளவில் அருவிகளில் விழும்போது சுற்றுலா பயணிகளை இழுத்து செல்லாதவாறு அருவியின் முன் பகுதியில் பாதுகாப்பான வகையில் பெரிய வளைவு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.

பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாதுகாப்பு வளைவு எவ்வளவு பெரிய காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட போதிலும் சேதமடைந்ததில்லை.

இப்படிப்பட்ட தனித்துவமிக்க இந்த அபாய வளைவை இடிக்கும் பணியில் தற்போது சுற்றுலாத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, சீரமைப்பு பணிகள் செய்ய சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ள நிலையில், குற்றாலம் மெயின் அருவியின் முன் பகுதியில் உள்ள குளம் தேங்கி கிடக்கும் பகுதியை சற்று மூடி குளிக்கும் பகுதியை சற்று அகலப்படுத்த சுற்றுலாத்துறையினர் திட்டமிட்டுள்ள நிலையில், அதன் முன் பகுதியில் அதே வடிவில் மற்றொரு பாதுகாப்பு வளைவை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், புதியதாக அமைய உள்ள அந்த பாதுகாப்பு வளைவானது குற்றால அருவியின் காட்டாற்று வெள்ளத்திற்கு தாக்குப் பிடிக்குமா? என பலரும் கேள்வி எழுப்பி உள்ள நிலையில், தரமான வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN