நான்கு நாட்களில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படும் - புதுடெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
புதுடெல்லி, 20 மார்ச் (ஹி.ச.) அதிமுகவின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, புதுடெல்லியில் நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக முக்கியமான ஆல
நான்கு நாட்களில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படும் - புதுடெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி


புதுடெல்லி, 20 மார்ச் (ஹி.ச.)

அதிமுகவின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, புதுடெல்லியில் நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக முக்கியமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை புது டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தேர்தல் பணிகள் இருப்பதால் அமித்ஷாவை சந்திக்க நேர்ந்தது. அவரோடு தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தேன். நான்கு ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. ஆகையால் அவரை நான் நேரில் சந்தித்தேன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.

எங்கள் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும். கூட்டணியில் இணைய வேண்டிய கட்சிகள் இணைந்துள்ளன.

தவெகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. இதனை அவர்களும் உறுதிப்படுத்திவிட்டனர். இன்னும் நான்கு நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதியாக்கப்படும். எந்தெந்த கட்சிகளுக்கு எங்கே வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அந்த இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும். ஒரு வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை வழங்கியிருக்கிறோம். மத்திய அரசாங்கத்திடம் இருந்தும் பலவிதமான திட்டங்களை பெற்று செயல்படுத்தியிருக்கிறோம்.

திமுகவின் இந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் எந்த ஒரு புதிய, பெரிய திட்டமும் இல்லை. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் துன்புறுத்தல் என நடக்காத நாட்களே இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM