தமிழக அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சென்னை, 20 மார்ச் (ஹி.ச) கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி பயணிகளுடன் இன்று (20.03.2026) அரசுப் பேருந்து சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் டெம்போ மற்றும் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேய
தமிழக அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


சென்னை, 20 மார்ச் (ஹி.ச)

கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி பயணிகளுடன் இன்று (20.03.2026) அரசுப் பேருந்து சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் டெம்போ மற்றும் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பைக்கில் இருந்த தாய், மகன் ஆகிய இருவரும் டெம்போவில் பயணித்த 11 மாதக் குழந்தை, 5 வயது சிறுமி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,

சேலம் - உத்தமசோழபுரம் பகுதியில், கோயம்புத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

சாலையோர தடுப்பை உடைத்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்ற செய்திகள் வருகின்றன, வருத்தத்திற்குரிய இத்தகவல் அறிந்து மிகுந்த துயருற்றேன்.

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ள நிலையில், இந்த ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அஇஅதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம்பெற்று இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b