Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 20 மார்ச் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தூய்மை பணியாளரை சாலையில் மது போதையில் நடந்து சென்ற இருவர் சரமாரியாக தாக்கிய
சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
தாழையூத்து சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 13ஆம் தேதி, அவர் இருசக்கர வாகனத்தில் தாழையூத்து மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மது போதையில்
இரண்டு நபர்கள் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி, சாதி பெயரை கூறி திட்டி
சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த செல்வராஜ் அருகில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து,
பின்னர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தாழையூத்து காவல் நிலையத்தில் புகார்
அளிக்கப்பட்டிருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.
அதில், காவல்துறை தன்னுடைய வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றும்,
குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
இந்நிலையில், காவல்துறை தரப்பில் கேட்டபோது, சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் மது போதையில் இருந்ததாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறே இந்த
தாக்குதலுக்கு காரணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம்
தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam