தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை
சென்னை, 20 மார்ச் (ஹி.ச.) எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று (19.03.2026) காலை 10 மணியளவில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துற
Piyush Goyal to visit Chennai tomorrow.


சென்னை, 20 மார்ச் (ஹி.ச.)

எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று (19.03.2026) காலை 10 மணியளவில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இருவரும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் இன்று (20.03.2026) டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க. மற்றும் பாஜக இடையிலான முக்கியக் கட்டப் பேச்சுவார்த்தை நாளை (21.03.2026) மாலை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதற்காக தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை (21.03.2026) மதியம் 12 மணிக்கு சென்னை வரவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் நாளை மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இது தொடர்பாக ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்போது பாஜகவுக்கு 27 முதல் 29 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் குறிப்பாக சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளை பா.ஜ.க. கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மற்றொருபுறம் அதிமுக சார்பில் ஏற்கனவே கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்து, தனது கூட்டணிக் கட்சிகளான பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பின் முடிவாக நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b