Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 20 மார்ச் (ஹி.ச.)
புதுச்சேரியில் ஆளும் அரசான என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது.
புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கியது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 23ஆம் தேதி கடைசி நாளாக இருக்கும் வேளையில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முதல்வர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான குழுவினர் நேற்று (19-03-26) தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த சந்திப்பை தவிர்ப்பதற்காக முதல்வர் ரங்கசாமி, திடீரென திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுவிட்டார்.
இதற்கிடையில் புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ரங்கசாமிக்காக காத்திருந்ததாக தெரிகிறது. இதன் மூலம் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுவையில் மங்களம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ள முதல்வர் ரங்கசாமி முதலாவதாக இன்று தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b