சட்ட விரோதமாக இயங்கி வந்த 42 தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைப்பு
ஈரோடு, 20 மார்ச் (ஹி.ச.) சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு காப்பகங்களில் ஒன்றாகும். இது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு சுமார் 1,411 சதுர கி.மீ ஆகும். இது 2013ஆம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறி
Sealed


ஈரோடு, 20 மார்ச் (ஹி.ச.)

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு காப்பகங்களில் ஒன்றாகும். இது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இதன் மொத்த பரப்பளவு சுமார் 1,411 சதுர கி.மீ ஆகும். இது 2013ஆம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

இது முதுமலை, பந்திபூர், மற்றும் பிலிகிரிரங்கன் மலை (BRT) போன்ற புலிகள் காப்பகங்களுடன் இணைந்திருப்பதால், இது பெரிய அளவில் வனவிலங்குகளைக் கொண்ட வனபகுதியாகும். நீலகிரியில் இருந்து வரும் மாயாறு மற்றும் பவானி ஆறு என இரண்டு பெரிய ஆறுகள் இந்த வனப்பகுதி வழியாக பாய்ந்தோடுகிறது.

இதனால் இந்த வனப்பகுதிகளில் எப்போதும் செழிப்பாக காணப்படும். சமீபத்திய கணக்கெடுப்பின் படி இங்கு சுமார் 112 புலிகள் உள்ளன.

கடந்த 2010இல் புலிகள் எண்ணிக்கை 18ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. புலிகளை தவிர 651 யானைகள், சுமார் 111 சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், மான்கள், செந்நாய்கள், கழுதைப்புலிகள், 230 க்கும் அதிகமான பறவை இனங்கள் இந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் சட்ட விரோதமாக ரிசார்ட்டுகள் செயல்படுவதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வனப்பகுதியை ஒட்டி சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்களை அகற்றுவதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தலமலை, கேர்மாளம், ஆசனூர் பகுதிகளில் செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் தங்கும் விடுதி உரிமையாளர்கள், இதுதொடர்பாக எந்தவித பதிலும் அளிக்காததால், கடந்த ஜன.13ம் தேதி ஊரக உள்ளாட்சித் துறை உதவி இயக்குநர் உமா சங்கர் தலைமையில் 5 குழுக்களாக பிரிந்து வருவாய், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த விடுதிகளை சீல் வைத்து மூடினர்.

Hindusthan Samachar / ANANDHAN